Thursday 14 April 2016

கொடி மரம் மூலவருக்கு நிகரானது.





கொடி மரம் மூலவருக்கு நிகரானது.

இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.சண்முகதிருக்குமரன்

     உமாபதி சிவம் தில்லை வாழ் அந்தணருள் ஒருவர். அருள் நூல்களிலும் வேதத்திலும் தேர்ந்த பயிற்சியுடையவர். இவருடைய எல்லையற்ற கல்வியினாலும் ஒழுக்கத்தினாலும் பல்லக்கில் செல்லவும், பகல் விளக்கு எடுக்கவும், சின்னங்கள் பணிமாறவும் உரிமை பெற்றிருந்தார். ஒருநாள் அவ்வாறு அவர் பல்லக்கில் செல்லும் போது சந்தான குரவருள் மூன்றாமவராகிய மறைஞானசம்பந்தர் உமாபதி சிவத்தை நோக்கி பட்ட கட்டையில் பகற் மரத்தால் அமைக்கப் பட்டது என்பதையும், பகலிலும் பணியாளர்கள் விளக்கேந்தி முன் செல்வதால் இவரைப் பகற்குருடு எனவும் எள்ளலாகக் குறிப்பிட்டார்.

இச்சொற்களைக் கேட்டவுடன் ஞானம் கைவரப் பெற்றவராய்ப் பல்லக்கிலிருந்து இறங்கி மறைஞானசம்பந்தரைச் சென்று வணங்கி அவரைத் தனது ஞான ஆசிரியராக ஏற்றுக் கொண்டார் உமாபதி சிவனார். ஒரு முறை மறைஞானசம்பந்தர் தில்லை நகரின் தெருவில் நெசவுக்காகப் பாவாற்றிக் கொண்டிருந்தவர்களிடம், அவர்கள் வைத்திருந்த உப்பில்லாத கஞ்சியைத் தம் கைகளில் வாங்கி ஏந்திக் குடித்தார். அப்போது அவர் புறங்கை வழியே ஒழுகிய மிச்சிலை ஆசிரியர் உமாபதிசிவம் ஞான ஆசிரியருடைய திருவருட்பிரசாதம் என்று ஏற்று அருந்தினார்.

இதனைப் பொறாத தில்லை வாழ் அந்தணர்கள் தாழ்ந்த குலத்தவர் தந்த கஞ்சியை உண்டதனால் ஆசிரியர் உமாபதி சிவம் சாதி ஆசாரத்தினின்றும் வழுவினார் என்று குற்றம் சாட்டி அவரைத் தம் சாதியினின்றும் நீக்கி வைத்தனர்
அதன் பின் ஆசிரியர் உமாபதி சிவம் தில்லையை அடுத்த கொற்றவன்குடியிலே மடம் அமைத்து வாழ்ந்திருந்தார்.
அப்போது தில்லைத் திருக்கோவிலில் திருவிழாத் தொடங்கிற்று. அந்தணர்கள் கொடியேற்ற முனைந்தனர். எவ்வளவு முயன்றும் கொடி ஏறவில்லை. அந்நிலையில் அம்பலவாணப் பெருமான் திருவருளால் உமாபதிசிவம் வந்தால் கொடி ஏறும் என்று விண்ணிலே ஒரு திருவாக்கு எழுந்தது. அதனைக் கேட்டு அஞ்சிய அந்தணர்கள் ஆசிரியர் உமாபதி சிவத்தை அணுகித் தங்கள் செயலுக்கு வருத்தி மன்னிப்புக் கேட்டு அவரைத் தக்க சிறப்புக்களுடன் தில்லைக்கு அழைத்து வந்தனர்.

திருக்கோவிலின் முன்பு வந்து கொடி மரத்தின் அருகே நின்று இக்கொடிக் கவியின் முதலாவது பாடலை உமாபதி சிவம் அருளிச் செய்த அளவிலே தடை ஏதுமின்றிக் கொடி தானாக மேல் ஏறிற்று. அதன் பின்னர் அடுத்த மூன்று பாடல்களையும் அருளிச் செய்து உமாபதி சிவம் நூலை நிறைவு செய்தார். எனவே இந்நூல் கொடிக்கவி அல்லது கொடிப் பாட்டு என்று வழங்கலாயிற்று.

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஒன்று மேலிடில் ஒன்று  ஒளிக்கும் எனினும் இருள் அடராது உள் உயிருக்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்து உளதேனும் திரிமலத்தே குளிக்கும் உயிர் அருள் கூடும் படி கொடி கட்டினனே.

சிவஞானப் பேரொளிக்கும் ஆணவமாகிய காரிருளுக்கும் இடம் கொடுத்து நிற்பது உயிர் ஒன்றே. இவ்வுயிரில் பதிஞானம் மேலிட்டு நின்றால் ஆணவம் ஒளித்து நிற்கும். ஆணவ மலம் மேலிட்டு நின்றால் ஞானப் பேரொளி விலகி நிற்கும். இருள், ஒளியை அடர்த்து எழுகின்ற ஆற்றலை உடையதன்று. உயிர்களுக்கு இறைவன் திருவருளால் சற்றே அறிவு விளங்கித் தோன்றுமாயினும் உயிர்களின் ஆணவ மலச் சார்பால் அவை மும்மலங்களுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அவற்றிலிருந்து உயிர்கள் தம்மைத் தாமே விடுவித்துக் கொள்ளும் வலிமையற்றவை ஆகின்றன. இவ் வுயிர்களை மும்மலங்களிலிருந்து விடுவித்துத் தீக்கை முறைகளின்படி செலுத்தித் திருவருட் பேரொளியிலே கூட்டும் படிக்குக் கொடி உயர்த்தினேன். என்கிறார் அன்றுமுதல் ஆலயங்களில் கொடியேற்றும் வைபவம் நடைபெறுகிறது உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய கொடிக்கவி மிக முக்கியத்துவம் வாய்ந்தது..


No comments:

Post a Comment