Friday 15 April 2016

16-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்.!

16-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்.!

சார்லி சாப்ளின்

ஹாலிவுட்டின் தன்னிகரற்ற கலைஞரான விளங்கிய சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே மேடை ஏற்றப்பட்டார். முதல் நாளன்றே ரசிகர் கூட்டத்தை வசியப்படுத்தினார்.

சிறுவன் சார்லி குடும்பத்தைக் காப்பாற்ற லண்டன் நகரில் உள்ள நாடகக் குழுக்களுக்கான ஒரு செயலாளரை சந்தித்து வாய்ப்புக் கோரினான். சார்லியின் அபாரத் திறமையை உணர்ந்த சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த முதல் மவுனத் திரைப்படம் 1914 இல் வெளிவந்தது. இவரது இரண்டாவது படம் பிரம்மாண்ட வெற்றியை ஈட்டியது.

இவரது சிறந்த ஆறு திரைப்படங்கள் அமெரிக்காவின் நேஷனல் ஃபிலிம் ரெஜிட்ரி அமைப்பில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகையே சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து ஹாலிவுட்டில் தனித்துவம் வாய்ந்த மேதையாக இன்றளவும் போற்றப்படும் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் 1977 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி தனது 88வது வயதில் காலமானார்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964ஆம் ஆண்டு, தில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றமானது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்தது. அதன்படி, அப்பொழுது மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியக் கல்வியாய்வுகள் துறையில் தலைமை வகுத்துக் கொண்டிருந்த தனிநாயக அடிகளார் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டு 23 ஆம் தேதி வரை நடைபெற்றது.

முதல் இயங்கும் விமானத்தினை உருவாக்கிய ரைட் சகோதரர்களில் இளையவரான வில்பர் ரைட் 1867 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி பிறந்தார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் 7வது முதல்வர் ஜார்பம் காம்லின் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி பிறந்தார்.

1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி இந்தியாவின் முதலாவது பயணிகள் ரயில் சேவை மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது.

1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நாசாவின் அப்போலோ-16 விண்கலமானது விண்ணில் ஏவப்பட்டது.

No comments:

Post a Comment