Monday 11 April 2016

11-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்.!

கஸ்தூரிபாய் காந்தி

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நிழலாக வாழ்ந்த கஸ்தூரிபா காந்தி அவர்கள் 11.04.1869 இல் குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் பிறந்தார். இவர் மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார் ஆவார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர் ஆவார்.

இந்தியா வம்சாவளி தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப்போராட்டங்களில் கஸ்தூரிபா காந்தியும் பங்கேற்றார். 1913 இல் நடந்த அறப்போராட்டத்தில் கலந்துகொண்ட கஸ்தூரிபா, கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். காந்திஜி கைதான நேரங்களில் அறப்போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்குண்டு. 1915 இல் பாரதம் திரும்பியது மகாத்மா காந்தி குடும்பம். அதன் பிறகு இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூரிபா காந்தி விளங்கினார்.

சிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார். ஆயினும், கணவருடன் எளிய வாழ்வு வாழ்ந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது கைது செய்யப்பட மகாத்மா காந்தியுடன் கஸ்தூரிபா காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, பிப்ரவரி 22, 1944 இல் நோயால் மரணம் அடைந்தார். இவரைப் பற்றிய தகவல்களை உருக்கமாக தனது "சத்திய சோதனை" நூலில் குறிப்பிட்டுள்ளார் மகாத்மா காந்தி. கஸ்தூரிபா காந்திக்கு என்று தனித்த வாழ்க்கை ஏதுமில்லை. மகாத்மா காந்தியின் வாழ்க்கையே கஸ்தூரிபா காந்தியின் வாழ்க்கையாகும்.

ஆப்பிள் 1 கணிப்பொறி

1976ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கணிப்பொறி வெளியிடப்பட்டது. ஆப்பிள் நிறுவனமானது, 1976ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி துவங்கப்பட்டது. இதனை ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வாஸ்னயிக் ஆகியோர் இணைந்து தொடங்கினர். இதன் முதல் தயாரிப்பான ஆப்பிள் 1 அந்தக் காலத்திலேயே 36,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மரத்தினால் ஆன கீ போர்டுடன் கூடிய இந்த கணினி, உலகம் முழுவதும் பெரிதும் பேசப்பட்டது. இதனை வடிவமைத்தவர் ஸ்டீவ் வாஸ்னயிக் ஆவார். இதன் வெற்றிகரமான விற்பனைக்கு ஸ்டீவ் ஜாப்ஸின் யோசனை தான் பெரிதளவில் உதவியது. கடந்த 2013ஆம் வருடம் இந்த ஆப்பிள் 1 கணிப்பொறி ஜெர்மனியில் ஏலம் விடப்பட்டது. அப்போது, ரூ.3.5 கோடிகளுக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

1814 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி மாவீரன் நெப்போலியன் முதன் முறையாக அரசு பதவியைத் துறந்து எல்பா தீவுக்குச் சென்றார்.

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் கடைசி உரை 1865 ஆம் ஆண்டி ஏப்ரல் 11 ஆம் தேதி இடம்பெற்றது.

1905 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் அமைப்பு தொடங்கப்பட்டது.

1921ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.

2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் பயத்தை ஏற்படுத்திய சார்ஸ் நோய்க்கான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment