Tuesday 5 April 2016

06-04-2016 இன்றைய வரலாற்றுச் சுவடுகள்.!

6-4-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளை

பிற்காலக் கம்பர் என்று போற்றப்பட்டவரும், தமிழறிஞருமான மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் 1815 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் பிறந்தவர். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆவார். தமிழ்ப் புலவரான தனது தந்தையிடமே தமிழ் கற்றார். காப்பியங்கள், அற நூல்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவர் அபார நினைவாற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார். பாடல்களைப் படித்த வேகத்தில் மனத்தில் பதிய வைத்துக்கொள்வார்.

19 ஆம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் இவர்தான். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார். தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய இவர் ஜனவரி 2, 1876 இல் தமது 61 வது வயதில் மறைந்தார்.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட தினம்

1896 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி முதன் முதலாக ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டன. ஒலிம்பிக் போட்டியானது, கி.மு.776 முதல் கி.பி.393 வரை கிரேக்கத்தில் உள்ள ஒலிம்பியாவில் நடைபெற்று வந்தது. அதன் பிறகு சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் 1894 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒலிம்பிக் குழு மூலமாக 1896ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த போட்டி கிரேக்கில் உள்ள ஏதேன்ஸ் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 200 நாடுகள் கலந்து கொண்டது. 1896 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போர் பிரகடனம் செய்தது.

தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவரான கோ. நம்மாழ்வார் அவர்கள் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பிறந்தார்.

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியாவில் மகாத்மா காந்தி பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்.

1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி முதலாவது தகவல் தொடர்பு செய்மதியான ஏர்லி பேர்ட் (Early Bird) விண்வெளிக்கு ஏவப்பட்டது.

No comments:

Post a Comment