Thursday 24 March 2016

ஜனநாயக கடமை ஆற்றுவோம்!

ஜனநாயக கடமை ஆற்றுவோம்!

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அமலில் இருக்க வேண்டிய தேர்தலுக்கான நடத்தை விதிகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விடுகின்றன. இதன் பிறகு, வாக்காளர்களுக்கு பயனளிக்கக் கூடிய எவ்வித சலுகை அறிவிப்புகளையும், அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ அறிவிக்கக் கூடாது.

புதிய திட்டம் தொடர்பான அறிவிப்போ, அடிக்கல் நாட்டு விழாவோ நடத்தக் கூடாது. அது தொடர்பான வாக்குறுதிகளையும் அளிக்கக் கூடாது.

அரசு சார்ந்த நிறுவனங்களில் தனிப்பட்ட எந்தவொரு பணி நியமனத்தையும் செய்யக் கூடாது.

வேட்பாளர் எவரும் எந்தவொரு தனி நபருடைய நிலம், கட்டிடம், மதிற்ச்சுவர் முதலியவற்றின் மீது, அதன் உரிமையாளரின் அனுமதியின்றி கொடிக் கம்பம் நடுதல், விளம்பரத் தட்டிகள் கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், விளம்பரம் எழுதுதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது.

ஓட்டுகளை பெறுவதற்காக சாதி, சமுதாய உணர்வுகளின் பேரில் வேண்டுகோள் விடக்கூடாது. கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது.

தேர்தல் நேரத்தில் பத்திரிக்கைகளிலும், பிற ஊடகங்களிலும் அரசு செலவில் அரசின் சாதனைகளை விளம்பரமாக வெளியிடுதல், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பயன்படுத்துதல் கூடாது.

ஒரு அரசியல் கட்சியின் கூட்டம் நடத்துமிடத்தில், அதே நேரத்தில் மற்றொரு கட்சி ஊர்வலமோ, பேரணியோ நடத்தக் கூடாது. அதேபோல் ஒரு அரசியல் கட்சியின் விளம்பரங்களை மற்றொரு அரசியல் கட்சி அகற்றக் கூடாது.

வாக்காளர்களுக்கு கையூட்டு, அன்பளிப்பு வழங்குதல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக் கோருதல் போன்றவை தேர்தல் விதிகளுக்கு மாறானவை.

வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பாகவே மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறும். அதன் பின்னர் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் வேட்பாளர்கள் இறங்கக் கூடாது.

வாக்குச் சாவடிக்கு வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வர வேட்பாளர் எவரும் ஏற்பாடுகள் செய்யக் கூடாது.

அரசியல் கட்சி அல்லது வேட்பாளர், தான் கூட்டம் நடத்த கருதியுள்ள இடம் மற்றும் நேரம் குறித்து உள்ள+ர் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

கூட்டம் தொடர்பாக ஒலிபெருக்கி அல்லது வேறு வசதிகளுக்கான அனுமதி அல்லது உரிமம் பெறப்பட வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஊர்வலம் நடக்கும் நேரம், அது தொடங்கும் இடம், செல்லும் வழித்தடம், முடியும் நேரம் மற்றும் இடம் போன்றவற்றை காவல்துறைக்கு தெரிவித்து உரிய முன்அனுமதியுடன் ஊர்வலங்களை நடத்த வேண்டும்.

ஊரகப் பகுதிகளில், கட்டிட உரிமையாளரின் ஒப்புதல் பெற்று விளம்பரம் செய்யலாம். இந்த ஒப்புதலை பெற்றதற்கான நகல்களை 3 நாட்களுக்குள் தேர்தல் அதிகாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம், அந்த வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியினர் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசுக்கு சொந்தமான ஓய்வு இல்லங்கள், பயணிகள் தங்கும் இடங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான தங்கும் இடங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் எந்த வித பாகுபாடுமின்றி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த தங்கும் இடங்களை பிரசார அலுவலகங்களாகவோ, பொதுக்கூட்ட இடமாகவோ, தேர்தல் பிரசார நோக்கத்துக்காக அரசியல் கட்சிகளோ, வேட்பாளரோ பயன்படுத்தக்கூடாது.

50,000-த்திற்கும் மேல் ஒருவர் பணத்தை இடமாற்றம் செய்யும் பொழுது பணத்திற்கான உரிய ஆவணங்களை வைத்திருத்தல் அவசியம்.

No comments:

Post a Comment