Wednesday 23 March 2016

உலக புகழ் முக்கிய நாள்

உலக புகழ் முக்கிய நாள்.
உலக வானிலை தினம்

வானிலை மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகளாகும். உலக வானிலை ஆய்வு மைய நிறுவனம் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1950 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தொடங்கப்பட்டது. எனவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 ஆம் தேதி உலக வானிலை தினம் கடைபிடிக்கப்பட்டுகிறது.
இத்தினத்தில் மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்து வலியுறுத்தப்படுகிறது. வானிலை பற்றிய செய்திகளில் குறிப்பாக, வெப்பமயமாதல், பனி உருகுதல், கடல்மட்டம் உயர்தல், ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசுபடுதல், இயற்கை பேரிடர்கள், மழை பற்றிய நிகழ்வுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம்.

ஜி. டி. நாயுடு

ஜி. டி. நாயுடு என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் 1893 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். மேலும், விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை அறிந்துக்கொண்டார்.
பின்னர், வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார். அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமையால் குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார். அறிவியல் துறையில் இவர் பல சாதனைகளை படைத்துள்ளார். உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு 1974 ஆம் ஆண்டு இறந்தார்.

பகத் சிங்

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் அவர்கள் 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி பிறந்தார். இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளர் ஆவார். இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பத்தில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். இவர் 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு, ஏனைய பிரிட்டிஷ் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் லாலா லஜபத் ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தனது 24 வயதில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட தூண்டுதலாக இருந்தது.

1903 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்தனர்.

1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1942 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இரண்டாம் உலகப் போரில் இந்தியப் பெருங்கடலுள்ள அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர்.

No comments:

Post a Comment