Saturday 20 September 2014

பாரம்பரிய மருத்துவம் அண்டிபயொட்டிக்களின் சகாப்தம் முற்றுப்பெறுகின்றதா





Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-37
Cell : 9600068631 - 9600068931


அண்டிபயொட்டிக்களின் சகாப்தம் முற்றுப்பெறுகின்றதா
பயங்கரமான எதிர்காலம் உருவாகிக் கொண்டுள்ளது. ஒரு சிறிய காயம், உங்களது உயிரையே போக்குமளவுக்கு தீவிரத்தை ஏற்படுத்தக்கூடும். சிறிய அறுவைச்சிகிச்சைகளுக்கு உட்படுவோர் கதை வாழ்வுடன் போராடும் சம்பவமாகும். புற்றுநோய்களுக்கு எதிரான சிகிச்சை, உறுப்பு மாற்றம் போன்றவற்றை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இது அன்டிபயொட்டிக் எனப்படும் பக்டீரியா எதிர்ப்பிகள் செயலிழந்த வருங்காலம்.
இது ஏதோ ஒரு அறிவியற்புனை கதை படிப்பது போன்று தோன்றினாலும் நாம் அனைவரும் அன்டிபயொட்டிக்களின் முறையான பயன்பாட்டைப்பற்றிய விழிப்புணர்வு அன்றி இருப்போமாயின் மேற்குறிப்பிட்ட நாள் இன்னும் இருபது ஆண்டுகளில் உருவாகலாம். இந்த நிலைமைக்கு பக்டீரியா மட்டுமன்றி நாம் அனைவரும்கூட காரணமாக இருக்கின்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவான இலகுவில் குணமாகும் தொற்றுநோய்களுக்கு மருந்துகள் இல்லாது போகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது. ஐக்கிய அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் இதை கொடுங்கனவுப் பாக்டீரியாஎன இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது. டேம் சால்லி டேவிசு எனும் இங்கிலாந்து நாட்டுப் பேராசிரியை இதைப் பேரழிவு என வர்ணிக்கின்றார்.  
பக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகள் அன்டிபயொட்டிக்களால் செயலிழக்கின்றன அல்லது இறக்கின்றன என்பது யாவருக்கும் தெரிந்த விடயம், ஆனால் படிப்படியாக அன்டிபயொட்டிக்களின் செயலாற்றலுக்கு எதிராக தம்மை உருவாக்கிக்கொண்டு வரும் பக்டீரியாக்கள் பற்றி அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே.
அன்டிபயொட்டிக் எனும் சொல்லை கவனிக்கவேண்டியது முக்கியமானது. இது பிரான்சிய antibiotique எனும் சொல்லில் இருந்து உருவானது. இங்கே anti என்பது எதிர்என்றும் biotique என்பது உயிர்வாழும் உயிரினங்களைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இது நுண்ணுயிரிகளுக்கு எதிரானஎனும் கருத்தில் பயன்படுத்தப்பட்டது. தமிழில் இதனை நுண்ணுயிரி எதிர்ப்பிகள் என்றோ அல்லது உயிர்மி எதிர்ப்பிகள் என்றோ அழைக்கலாம். எனினும், இப்போது அன்டிபயொட்டிக் என்று அழைக்கப்படும் மருந்துகள் பக்டீரியாவுக்கு எதிரானவை மட்டுமே என்பதால் அவற்றை பக்டீரிய எதிர்ப்பிகள் எனக்கூறுவதே சாலச்சிறந்தது. (இக்கட்டுரையில் அன்டிபயொட்டிக் பக்டீரிய எதிர்ப்பிகள் என்று மேற்கொண்டு அழைக்கப்படுகின்றது என்பதை வாசகர்கள் கவனிக்க.) வைரசுக்கு எதிரான மருந்துகள் அன்டி வைரஸ்” (தீநுண்ம எதிரிகள்) என்று அழைக்கப்படுகின்றன. இதேபோல பூஞ்சைகளுக்கு எதிரானவையும் பூஞ்சை எதிர்’  என்று அழைக்கப்படுகின்றன.
பல பக்டீரியா தற்போது பயன்பாட்டில் உள்ள பக்டீரிய எதிர்ப்பிகளுக்கு ஏற்ப தம்மை இசைவாக்கி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராகப் பயன்படுத்திய பக்டீரிய எதிர்ப்பியை இன்று பயன்படுத்தமுடியாத சூழ்நிலை உருவாகிக்கொண்டே வருகின்றது. இதற்குக் காரணம் அக்குறிப்பிட மருந்துக்கு எதிரான தடுப்பாற்றலை படிப்படியாக பக்டீரியா உருவாக்கி வருவதே ஆகும். இது அவற்றின் மரபலகு (ஜீன்) திரிபடைவதால் உருவாகின்றது. நாம் பக்டீரிய எதிர்ப்பிகளைப் பயன்படுத்தும் முறையில் இது தங்கி உள்ளது.
ஒரு புதிய அன்டிபயொட்டிக் மருந்தொன்று குறிப்பிட்டவொரு பக்டீரியா வகைக்கு எதிராக வழங்கப்படுகின்றது; அவை அந்த மருந்துக்கு எதிராக வாழ தம்மைப் பழக்கப்படுத்திக்கொள்கின்றன. ஆண்டுகள் செல்லச் செல்ல அந்த பாக்டீரிய வகையை எதிர்க்க வேறொரு புதிய மருந்து தேவைப்படுகின்றது. அவற்றையும் தமது தடுப்பாற்றலால் எதிர்கொள்கின்றன. பல வகை பக்டீரியா, பல வகை புதிய மருந்துகள் என இந்தப் போர் மேலும் தொடர்கின்றது.
பின்னர் என்ன சிக்கல்? மேலும் புதிய மருந்துகளைப் பயன்படுத்துவதுதானே என்று கேட்கத் தோன்றும். முதன்முதலில் அலெக்சாந்தர் பிளெமிங் என்பவரால் 1928ஆம் ஆண்டு பெனிசிலின்எனும் பக்டீரிய எதிர்ப்பி கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பலவேறு வகுப்பு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1945இல் டெட்ராசைக்கிளின், 1948இல் கேபலோஸ்போரின், 1962இல் குயினலோன்கள், 1987இல் லிப்போபெப்டைட்டுகள் என்பன சில கண்டுபிடிப்புகளின் காலமாகும். ஒவ்வொரு வகுப்பு வகையில் இருந்தும் சிறிய மாறுபாடுகளுடன் பல மருந்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, சிப்ரோபுளோக்சாசின் மற்றும் நோர்புளோக்சாசின் (norfloxacin) ஆகியன  குயினலோன்கள் வகையைச் சார்ந்தவை. லிப்போபெப்டைட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட 1987க்குப் பின்னர் வேறெந்தப் புதிய வகுப்பு வகைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை! பெனிசிலின் வகுப்பு, குயினலோன்கள் மற்றும் கேபலோஸ்போரின் போன்றவற்றிற்கு எதிராக சர்வசாதாரணமாக தமது எதிர்ப்பைக் காட்டுகின்றன அந்த நுண்ணிய உயிரிகள்.
சில பாக்டீரியாக்கள் குறிப்பிட்டவொரு வகை பக்டீரிய எதிர்ப்பிக்கு எதிராகவே தடுப்பாற்றலைக் கொண்டுள்ள சமயத்தில், வேறு சில பக்டீரியாக்களோ சில வகை பக்டீரிய எதிர்ப்பிகளுக்கு எதிரான ஆற்றலைக் கொண்டுள்ளன. MRSA (Methicillin-resistant Staphylococcus aureus) எனும் பக்டீரியம் சில பக்டீரிய எதிர்ப்பிகளுக்கு எதிரான ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த மெதிசிலின் தடுப்பாற்றலுடையஇசுடபிலோகொகசு ஔரியசு குருதி நஞ்சடைதலை உருவாக்கும் ஆபத்தான பாக்டீரிய வகை ஆகும். இவ்வகை பக்டீரியா சூப்பர்பக் (superbug) என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படுகின்றன.
குளோபல் வோ(ர்)மிங் எனும் உலக வெப்பமடைதலுடன் ஒப்பிடக்கூடிய பிரச்சனையாக இது தலைதூக்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டுப் பேராசிரியையான டேம் சால்லி டேவிசு இப்பிரச்சனையை டிக்ஒலியை ஏற்படுத்தும் நேரவெடிகுண்டுடன் ஒப்பிடுகின்றார். இந்நிலைமை நீடிக்குமானால் இன்னும் இருபது வருடங்களில் தொற்றுநோய்க்கெதிராகப் போராடும் ஆற்றலை இழந்துவிடுவோம் என்று டேம் சால்லி எச்சரிக்கை விடுத்தார். இச்சிக்கலுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில் அறுவைச்சிகிச்சைகளில் இலகுவாக தொற்று ஏற்பட்ட 19ம் நூற்றாண்டை நோக்கிச் செல்லுவோம் என்று மேலும் கூறினார். இன்னும் இருபது வருடங்களில் ஒரு இடுப்பெலும்பு மாற்றும் அறுவைச்சிகிச்சைக்குட்படும் ஒருவர் இறந்துவிடுவார், காரணம் வழமையான தொற்றுக்களே பக்டீரிய எதிர்ப்பிகள் ஏதுமில்லாச் சூழலில் அவரைக் கொன்றுவிடும்.
இதுமட்டுமல்லாது, முதியோர்களில் இலகுவில் உண்டாகும் தருணத்தொற்று தவிர்க்கப்படமுடியாததாக உருவாகிவிடும்; கொனேரியா போன்ற பாலியல் நோய்கள் குணப்படுத்த முடியாச் சூழ்நிலை ஏற்படும்.
இது புறக்கணிக்கத்தக்க விடையமல்ல. நாம் யாவரும் கடுமையாக சிந்தித்து செயற்படும் விடயம் இது. பற்பல நாடுகளில் பக்டீரிய எதிர்ப்பிகளை உரிய முறையில் பயன்படுத்துவது இல்லை. சிறிது காய்ச்சல் வரினும் அன்டிபயொட்டிக்”; வைரசுவால் ஏற்படும் தானாகவே குணமடையும் தடிமனுக்குக் கூட அன்டிபயொட்டிக்”; இவை எல்லாம் பக்டீரியாவுக்கு
தடுப்பாற்றலைத் தூண்ட நாம் வழிவகுக்கும் முறைகள். பக்டீரிய எதிர்ப்பிகள் ஓரிரண்டு வாரத்துக்கே பயன்படுத்தவேண்டும் என்பதும் அவசியமாகக் கவனிக்கவேண்டியதொன்றாகும்.
நோயுற்றவர்களோ, அன்றி மருத்துவர்களோ இதனுடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். அன்டிபயொட்டிக் என அழைக்கப்படும் பக்டீரிய எதிர்ப்பிகள் பக்டீரியாவுக்கு மட்டுமே எதிரானவை. வைரசுக்கு எதிரான மருந்துகள் அன்டி வைரஸ்என்று அழைக்கப்படுகின்றன. சிலர் அன்டிபயொட்டிக் என்றால் எந்தவிதமான தொற்றுகளையும் குணமாக்கும் என்று நம்புவது அடுத்ததோர் பிரச்சனை. பல மருந்துக் கடைகளில் பக்டீரிய எதிர்ப்பிகள் இலகுவில் கிடைக்கின்றன. இதுவும் இவற்றின் தகாத பயன்பாட்டை விவரங்கள் அறிந்திடாதோர் மத்தியில் கூட்டுகின்றது. அனைவருக்கும் இவற்றைப் பற்றிய அறிவை, விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அறிந்தோரின் கடமையாகும். சில மருத்துவர்கள்கூட பக்டீரிய எதிர்ப்பிகளைத் தேவையற்ற சந்தர்ப்பங்களில் வழங்குகின்றனர். இது ஏதாவது ஒரு மருந்தை நோயாளிக்குக் கொடுத்தே தீரவேண்டும் இல்லாவிடின் நோயாளிக்கு தன்னில் நம்பிக்கை இல்லாது போய்விடும் எனும் எண்ணம் காரணமாக இருக்கலாம். அதேபோன்று சில நோயாளிகள் மருத்துவரிடம் இருந்து எப்பொழுதிலும் மருந்துகளை எதிர்பார்த்தலும் காரணமாக இருக்கலாம்.
விதிவிலக்காக, சில வைரசு நோய்களின் சந்தர்ப்பங்களில் இரண்டாம் தொற்றாக பக்டீரியத் தொற்று ஏற்படுவதுண்டு. இதனை மருத்துவர் நன்கு அறிவார். எனவே எப்போதும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே பக்டீரிய எதிர்ப்பிகள் பயன்படுத்தல் அவசியம்.
உலகில் சில தொற்றுநோய்களுக்கு எதிரான மருந்துகள் இன்னமும் பலனைத் தருகின்றன என்பது மகிழ்ச்சியைத் தரும் விடையமாயினும், ஒரு பாக்டீரிய ஆதிக்கத்தை எதிர்நோக்க:
·         சுகாதாரம் பேணுதல்,
·         பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் தேவையற்ற சந்தர்ப்பங்களில் பக்டீரிய எதிர்ப்பியைப் பயன்படுத்தலைத் தவிர்த்தல்,  
·         புதியதொரு பக்டீரிய எதிர்ப்பி வகுப்பு கண்டுபிடிக்கப்படல்,
·         ஏற்கனவே இருக்கும் மருந்துகளை உரிய முறையில் பயன்படுத்தல் போன்றன சில வழிவகைகளாக அமைகின்றன..
இவை ஒன்றும் பேணப்படாது பாக்டீரியாக்கள் தமது போரில் வெற்றியடைந்து சென்றால் எதிர்காலத்தில் பக்டீரிய எதிர்ப்பிகளின் பயன்பாடு கேள்விக்குறியாக மாறிவிடும். அந்நேரத்தில், ஒரு ரோசா முள்ளுக் குத்தி ஏற்பட்ட காயம் கூட உயிரையே போக்குமளவு ஆபத்தானதாக அமையலாம். எனவே இன்றிலிருந்து அன்டிபயொட்டிக்கை தேவையற்ற சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலைத் தவிருங்கள், தேவையற்று நோயாளிக்குப் பரிந்துரைப்பதை நிறுத்துங்கள். புதிதாக ஒரு மருந்து வகுப்பு கண்டுபிடிப்பார்கள்தானே என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அப்படி ஒன்று நிகழாமலும் போகலாம். பக்டீரியப் போரில் வெல்லுவதற்கு நாமும் எமது ஒத்துழைப்பை வழங்குவோம்.


Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment