Wednesday 6 November 2013

பகவானுக்கு பக்தர்கள் மீது பிரியம்

பகவானுக்கு பக்தர்கள் மீது பிரியம் ; பக்தர்களுக்கு பகவான் மீது பிரியம். இருவருக்குமே பகவான் நாமாக்களின் மீது மிகப் பிரியம். பக்தர்கள் எங்கே நாம சங்கீர்த்தனம் செய்கின்றனரோ, அங்கே பகவான் நாராயணன் வந்து விடுகிறானாம். எங்கே நாராயணன் இருக்கிறானோ, அங்கே ஸ்ரீ மகாலட்சுமியும் வந்துவிடுகிறாளாம்.
பகவான் நாராயணனும், மகாலட்சுமியும் இருக்கும் இடத்தில் மங்களம் பொங்கி வழியும். விஷயம் தெரிந்தவர்கள் அடிக்கடி, “நாராயணா, கிருஷ்ணா, கோவிந்தா…’ என்று முணு, முணுத்துக் கொண்டே இருப்பர்; தெரியாதவர்கள் பரிகாசம் செய்து கொண்டே போவர். நாமா சொன்னவன் நற்கதி பெறுகிறான்; பரிகாசம் செய்தவன் அதோகதியடைகிறான்!
வைகுண்டம் போக, ஸ்ரீராமன் புறப்படும்போது, ஆஞ்சநேயரைப் பார்த்து, “நீயும் வைகுண்டம் வருகிறாயா’ என்று கேட்டாராம். அதற்கு, “அங்கே ஸ்ரீமத் ராமாயணம் பிரவசனம் உண்டா, ராம நாமா சொல்லப்படுமா’ என்று கேட்டாராம் ஆஞ்சநேயர். அதற்கு, ராமன், “அங்கே அதெல்லாம் கிடையாது! சதா, என்னை தரிசனம் செய்து கொண்டிருக்கலாம்; அவ்வளவு தான். ராமாயணம், ராமநாமா எல்லாம் இங்கு பூலோகத்தில் தான்!’ என்றாராம்.
“அப்படியானால், எனக்கு ராம நாமா இல்லாத வைகுண்டம் வேண்டாம். நான், ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டும், ராமாயணம் கேட்டுக் கொண்டும் ஆனந்தமாக இங்கேயே இருந்து விடுகிறேன்!’ என்றாராம் ஆஞ்சநேயர். ராமனும் அப்படியே அனுக்ரகம் செய்தாராம். அதனால், இன்றும் ராமாயணம் நடக்கும் இடத்திலும், ராம நாமம் கேட்கும் இடத்திலும் சிரஞ்சீவியாக ஆஞ்சநேயர் இருந்து கொண்டிருப்பதாகச் சொல்வர்.
பகவான் நாமா வை சொல்பவர்கள் பகவானை விட உயர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். பகவானுக்கு அபசாரம் செய்து விட்டால் கூட, அவர் பொறுத்துக் கொள்வார்; பக்தனுக்கு அபசாரம் செய்து விட்டால், அவர் பொறுக்க மாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தன்னிடம் உள்ள பக்தியையும், அன்பையும் கண்டு அவர்களுடைய பாவங்கள் எல்லாவற்றையும் பகவான் பொறுத்துக் கொள்வதால், அவனுக்கு, “சஹிஷ்ணு’ என்று பெயர். பகவானுடைய ஆயிரம் நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும் இப்படி பொருள் உண்டு.
மனிதன் செய்யும் எவ்வளவோ தவறுகளை அவன் பொறுத்துக் கொள்கிறான். அளவு மீறிப் போகும் போது தான் பொறுமையை இழக்கிறான்; தண்டிக்கிறான். சிசுபாலன் கதை தெரிந்திருக்கும். கிருஷ்ணனால் தான் அவனுக்கு வதம் என்று சிசுபாலனின் தாயாருக்குத் தெரிந்தது. கிருஷ்ணனை, “நீ, என் மகனை கொன்று விடக் கூடாது…’ என்று வேண்டினாள்.
அதற்கு, “அவன், என்னை நூறு முறை திட்டும் வரையில் பொறுத்துக் கொள்கிறேன்; அதற்கு மேல் போனால் வதம் செய்து விடுவேன்…’ என்றார் கிருஷ்ணன். “அப்படியானால், ஒரு நாளைக்கு நூறு என்று வைத்துக் கொள்!’ என்று (இவளும், கிருஷ்ணனுக்கு ஒரு அத்தை உறவு!) வேண்டிக் கொண்டாள்; பகவானும் சரி என்றார்.
அன்று முதல் கிருஷ்ணனை 100 தடவை திட்டிவிட்டு பேசாமலிருந்து விடுவான் சிசுபாலன்; பகவானும் பொறுத்துக் கொள்வார். ராஜசூய யாகத்தின்போது, தன்னை மறந்து 100 தடவைக்கு மேல் கண்ணனைத் திட்டி விட்டான் சிசுபாலன். சக்ராயுதத்தால் உடனே அவனை வதம் செய்துவிட்டார் பகவான்.
ஆக, பகவான் ரொம்பவும் பொறுமையுள்ளவர்; கருணை உள்ளவர்; பக்த ரட்சகர். அவரது நாமாவை சொல்லி அவரை உபாசித்து வந்தால், நம் நலன்களை கவனித்துக் கொள்வார். கடைசியில், மோட்சத்தையும் அளிக்கிறார். இதைச் செய்வதில் நமக்கு என்ன சிரமம்.

No comments:

Post a Comment